Sunday, October 20, 2013

[Message] - இறைவனை உணர்தல்


ஒரு காதலியின் பரிசுப்பொருளையோ, படத்தையோ பார்க்கும் காதலன் அவளை அருகிலிருப்பாதாக உணர்ந்து மகிழ்கிறான். குழந்தையிடம் உள்ள யானைப் பொம்மையை, அது யானையாகவே பாவித்து உணவூட்டி, குளிப்பாட்டி மகிழ்ந்துறங்கும். பிரியமானவர்களை காணும்போது பூங்கொத்துக் கொடுத்து நமது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்துவோம்

அதேபோல, அண்டசராசரதின் பரம்பொருளை ஒரு சிலையிலுணர்ந்து வழிபட்டு இறைவன் மீதுள்ள பாசத்தைக் காட்டுகிறோம். அவர் நமக்களித்த நல்லனவற்றை ( சூரியன் - தீபம், நறுமணம் - மலர்கள்) மீண்டும் படைத்து நம் நன்றியைச் செலுத்துகிறோம். இறைவனின் அற்புதங்களைக் காணும்போதெல்லாம் அவர் அருகிலிருப்பதாக உணர்கிறோம்.

இவ்வாறாக நம் வழிபாட்டின்மூலம் இறைவன் மீதுள்ள பக்தி, பாசம், காதல் இவற்றை உணர்த்துகிறோம். ஆனால் ஞானமென்பது உடலே ஆலயமாக சீவனே சிவனாக உணர்நது, தெளிந்து, இறையுடன் இரண்டறக் கலப்பதாகும்.

நம் வழிபாட்டின் தத்துவம் இதுவே.

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காளா மணிவிளக்கு .
-திருமூலர் திருமந்திரம்-

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்பதில், உடம்பு ஆலயம். உள்ளம் கர்பக் கிரகம். 'வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்'- உடம்பாகிய ஆலயத்துக்கு வாய் தான் வாசல். உள்ளம் ஆகிய கருவறையில் சீவனாகிய சிவலிங்கம் இருக்கிறதாம். 'கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே'- ஐந்து புலன்களும் இறைவனுக்கு ஏற்றி வைத்த விளக்குகளாம்.

பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.


'உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்'

உடம்பு ஆலயம், உள்ளம் கர்பக் கிரகம், உறு பொருள் சீவனாகிய சிவன். மொத்த ஆலயத்தையும் கோயில் என்பதுண்டு. திருமந்திரத்திலேயே

'எண்ணிலா ஞானி உடலெரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்ட தாங்கொக்கும்'

என்கிற போது உடம்பு மொத்ததையும் கோயில் என்று கூறுகிறார்.

மேலும் எடுத்துக்காட்டுகள்

நெஞ்சகமே கோவில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூஜை கொள்ள வாராய் பராபரமே!
-தாயுமானவர்-

"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருகாயில்?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"
- சிவவாக்கியர்-

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே.
திருமந்திரம் - 272

இறைவனை அடையவேண்டி, உடம்பிலுள்ள எலும்பை விறகாக்கி, தசையை அறுத்து வேள்வியில் ஆகுதி செய்தாலும் போதிய பலனும், அவன் தரிசனும் கிட்டாது. அன்போடு உருகி வழிபட்டு நெகிழ்ந்தால் அவன் நமக்காக இறங்கிவருவான். கண்ணிலாதவனுக்கு பாதை தெரியாது. மனதில் அன்பு இல்லாதவனுக்கு இறைவனை அடையும் வழி தெரியாது.

No comments: