Wednesday, December 24, 2008

வளர்ச்சியை வேகமாக நிகழவைக்கும் ஒரு முக்கியமான ரகசியம்

ஆஸ்ரமத்திற்குள் ஒரே பரபரப்பு...

``இந்தத் துறவி திடீர் திடீரென்று காணாமல் போய்விடுகின்றார்.

அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் இவர் காணாமல் போய்விடுகின்றார். எங்கே போகிறார்? என்ன செய்கிறார்!?'' என்று காரசாரமான விவாதம் நடந்தது.

``இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற தவறான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று ஒருவருக்கொருவர் சொன்னார்கள்.

உடனே, அந்தத் துறவியின் அறைக் கதவு உடைக்கப்பட்டது. அறையின் முகப்பிலே கட்டிலுக்கு அருகில் ஒரு வாளியில் இரண்டு சேலைகள் நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தன.

இதைப் பார்த்ததும்... ``நாம் சந்தேகப்பட்டது சரியாய்ப் போய்விட்டது. இது சரியான ஆதாரம்'' என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது தூரத்தில் துறவி வந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்ட ஒருவர், ``அதோ அவர் வருகிறார் பாருங்கள்'' என்று சத்தமிட்டார்.

ஆஸ்ரமம் நோக்கி வந்துகொண்டிருந்த துறவி, ஏதோ ஒரு ஞாபகம் வந்தவரைப் போல் நின்று, திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தார். அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க மற்றவர்களும் பூனைபோல பின் தொடர்ந்தார்கள்.

துறவி ஊருக்கு வெளியே இருந்த அந்தத் தனி குடிசைக்குள் சென்றார். அவர் பின்னாலேயே பதுங்கிப் பதுங்கிச் சென்ற இவர்களும் ஜன்னலைத் திறந்து பார்த்தார்கள்.

உள்ளே நடந்த காட்சியைப் பார்த்த இவர்கள் முகம் இருளடைந்து நின்றார்கள்.

காரணம்...

வீட்டிற்குள்ளே சென்ற துறவி கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை எழுப்பி, ``மன்னித்துவிடம்மா... ஆஸ்ரமம் வரைக்கும் சென்ற பிறகுதான் உனக்கு இன்று இரவு மருந்து கொடுப்பதற்கு மறந்துவிட்டேன் எனத் தெரிந்தது. இதைச் சாப்பிடு'' என்று மருந்தைக் கொடுத்தார்.

மருந்து கொடுத்த துறவியைப் பார்த்து, நன்றிமிக்க அந்த அம்மா புன்னகையோடு தன் இரு கரங்களையும் கூப்பி நன்றி சொன்னார்... கொஞ்சம் கூட நகர முடியாத நிலையில் தொழுநோயுற்றிருந்த அந்த நூறு வயதுப் பாட்டி!

இவர்கள் தங்களின் தவறான முடிவை நினைத்துத் தலை கவிழ்ந்தார்கள்.

துறவியைப் பற்றி நல்லவிதமாக யோசிக்க விடாமல், அவர்களைத் தவறான முடிவுக்கு வரவைத்தது எது?

இதற்கு பதில் தெரிந்துவிட்டால் ஒருவரின் வளர்ச்சியை வேகமாக நிகழவைக்கும் ஒரு முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடித்துவிடலாம். அது...

மனிதன் இன்னொருவரிடம் கண்டுபிடிக்கும் தவறுகள், இன்னொருவரின் தவறுகள் அல்ல.

அவை அவனுடைய தவறுகள். இந்த உண்மை புரிந்தாலே உயர்வுக்கு வழி பிறக்கும்!


Thanks to kumudam.com

2 comments:

Kaarthik said...

सभी के लिए बहुत बढ़िया पाठ. रवि जी धन्यवाद

Gravity said...

अपनी टिप्पणी, mr.ą © ĸĀŋŋăň के लिए धन्यवाद