Friday, June 18, 2010
[Messages] - நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல் - சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவற்றை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்காக அளிக்கின்றோம்.
மனிதனின் வெளிப்பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால்தான் புலன், மனம், புத்தி, நான் - உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும், உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சச்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்த உடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்த விதமான கேடும் அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.
நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.
webdunia photo WD
இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, ஒரு பகுதி நான் - உணர்வு. ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் `அறிபவன்' ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக, சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான் - உணர்விலும் ஏறப்டும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோதான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப்பொருள் அணுக்களால் ஆனவை. ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.
உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.
மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.
வெளிச்சக்தி எதுவும் பாதிக்க முடியாத போது, எந்த மாறுதல்களையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லாவற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும்.
எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இதுதான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.
ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை, வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவிகளில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயர உயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.
நன்றி : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை - 4.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment